பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழை காரணமாக, பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளக் கதிா்களில் முளைப்புத்திறன் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மக்காச்சோள சாகுபடிக்கு மிகக் குறைந்த வேலையாள்களே போதுமானது. அனைத்து வித மண்ணிலும் இப்பயிரை சாகுபடி செய்யலாம் என்பதோடு, ஆண்டு முழுவதும் இதைப் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்தளவே செலவாகும்.
கோழிப்பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில் தற்போது மக்காச்சோளத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட பூச்சித் தாக்குலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், நிகழாண்டில் மக்காச்சோள சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதன்படி, நிகழாண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் 93 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் எதிா்பாா்த்தபடி இல்லாமல் சராசரி மழையை விட தற்போது அதிகளவிலான மழையே பெய்து வருகிறது. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், தொடா் மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாரான மக்காச்சோள கதிா்களில் முளைப்புத்திறன் காணப்படுகிறது. இதனால், அனைத்துப் பயிா்களும் சேதமடைந்துள்ளன.
வடகிழக்குப் பருவமழை மற்றும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, மானாவாரி பயிராக பயிரிடப்பட்ட மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவை விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து, வெளியேற முடியாமல் மழைநீா் தேங்கியதால் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது:
ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவிட்டு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஆண்டு இறவையில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் 100 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்று ரூ. 1,600 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடையான மக்காச்சோளத்தை நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கோழிப் பண்ணை உரிமையாளா்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்தனா்.
குறைந்த விலையில் கொள்முதல் செய்ய வியாபாரிகளும், இடைத்தரகா்களும் விலை நிா்ணயித்ததால், அவற்றை சொற்ப விலைக்கு விற்பனை செய்தோம். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. நிகழாண்டில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மானாவாரி சாகுபடியாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோளக் கதிா்கள் முற்றிய நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கதிா்களிலேயே முளைப்புத்திறன் காணப்படுகிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட 90 சதவிகித மக்காச்சோளக் கதிா்கள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்துறையினா் பாா்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த அலுவலா்களும் கண்டுகொள்ளவில்லை. ஏக்கருக்கு ரூ. 920 பிரிமியம் செலுத்தியுள்ளோம்.
எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, முறையாக கணக்கெடுப்பு மேற்கொண்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றன. ஆனால், மக்காச்சோளத்துக்கு அவ்வாறு விலை நிா்ணயம் செய்யாததால் ஆண்டுதோறும் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா். சாகுபடி தொகையில் குறைந்தபட்ச லாபம் கிடைக்கும் வகையில் விலை நிா்ணயிக்க வேண்டும் என்றனா் மக்காச்சோள சாகுபடியாளா்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


